டாக்டர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2004ஆம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை அருகே, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் காரில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணசாமி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த கொலை முயற்சி தொடர்பான வழக்கில் 15 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சிவா என்ற சிவலிங்கம், தங்கவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.