காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது. ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீரை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்கள் பிரச்னை இல்லாமல் பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டன. சில ஆண்டுகளாக இவற்றின் உத்தரவு அடிப்படையிலேயே தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. கர்நாடகாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. தண்ணீர் திறந்துவிட முடியாது என தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருவதால், தமிழகத்தின் உரிமையை போராடிப் பெற வேண்டிய நிலைதான் நிலவுகிறது.

கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனால், தண்ணீரை திறக்கவில்லை கர்நாடகா. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் கூடி கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால், ஏற்கனவே திறந்துவிட்ட தண்ணீரின் அளவையும் குறைத்துவிட்ட கர்நாடகா, தண்ணீர் திறக்க தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், தண்ணீர் திறப்புக்கு எதிராக கர்நாடகா முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கர்நாடகத்தின் கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. ஆனாலும் கூட மனமிறங்கி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைந்து 1500 கன அடி என்ற அளவில் வந்துகொண்டிருக்கிறது. நீர் வரத்தை விட வெளியேற்றம் 6500 கன அடி அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவு 35 அடியாக சரிந்தது.

இந்த நிலையில்தான் காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது. ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரைக்குமான தண்ணீர் திறப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு இதுவரை தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா, 3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில், கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர் நிரம்பி வருகிறது, அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பது நியாயமல்ல. டெல்டா பயிர்கள் கருகும் சூழலில் இருப்பதால் உடனடியாக 10,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளனர்.