சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை!

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை. இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மிக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியது. 5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் உடைத்துக்கொண்டு வெள்ளம் சீறிப் பாய்ந்தது. அந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த 4 மாவட்டங்களிலும் ஏற்கனவே பலத்த மழை பெய்து இருந்ததால் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 100 வாகனங்களில் வந்திருந்த வீரர்கள் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களும் தீஸ்தா நதி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு 4 மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகள் மற்றும் மக்களின் உடமைகளை வெள்ளம் அடித்து சென்றது. ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. அங்கிருந்து 23 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அவர்களது கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. வெள்ள சற்று வடிந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த மக்கள் மீட்கப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி விட்டனர். அவர்களது உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 23 ராணுவ வீரர்களில் ஒரு ராணுவ வீரர் இன்று அதிகாலை மீட்கப்பட்டார். மற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தீஸ்தா நதி வெள்ளம் பாய்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

சிக்கிம் மாநிலத்துக்கு இந்த சீசனில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். திடீர் மேகவெடிப்பு-மழை காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மழை வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன. சிக்கிம் மாநிலத்துக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.