கருணாநிதிக்கு பிறகு எனக்கு கொள்கை வழிகாட்டி வீரமணிதான்: முதல்வர் மு.க ஸ்டாலின்

என்னை பொருத்தவரை கருணாநிதி இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் வீரமணி அவர்கள்தான் என தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்ற தலைப்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தான் கருணாநிதிக்கு தாய் வீடு என்ற புத்தகத்தை வெளியிடக்கூடிய நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கருணாநிதிக்கு தாய்வீடு இது மிக மிக பொருத்தமான தலைப்பு. கருணாநிதிக்கு மட்டும் இல்லை எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய்வீடு. தாய்வீட்டில் கலைஞர் என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டும் இல்லை. நானும் என் வீட்டுக்கு செல்கிறேன் எனும் உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்து இருக்கிறேன். அதிலும் குறிப்பாக திராவிட கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அழைத்தால் எங்கும் போவேன்.. எப்பொழுதும் போவேன்.. எந்த நேரத்திலும் போவேன்.. காரணம் என்னை காத்தவர்.. இன்றைக்கும் காத்துக்கொண்டு இருக்கக்கூடியவர். அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர்தான் வீரமணி. தந்தை பெரியாரும் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் வீரமணி என்று கருணாநிதி குறிப்பிட்டார். என்னை பொருத்தவரை கருணாநிதி இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் வீரமணி அவர்கள்தான். அதனால்தான் நான் போக வேண்டிய பாதையை தீர்மானிப்பது பெரியார் திடல் தான் என்று பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன். இதைத்தான் நேற்றும் சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன். நாளைக்கும் சொல்வேன்.

திமுகவை உருவாக்கிய காலத்தில் அண்ணா குறிப்பிட்டார்.. திராவிடர் கழகத்திற்கு போட்டியாக இல்லை.. அதே கொள்கையை வேறு ஒரு பாணியில் சொல்வதற்காகத்தான் அந்த கொள்கையை செயல்படுத்தி காட்டுவதற்காகத்தான் என்று அண்ணா சொன்னார். திமுகவும் திகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்று அறிஞர் அண்ணா சொன்னார். திகவும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கருணாநிதி சொன்னார். என்னை பொறுத்தவரை திகவும் திமுகவும் உயிரும் உணர்வும் போன்றது. உயிரும் உணர்வும் இணைந்து உடல் இயங்குவது போல நாம் இந்த இனத்தின் உணர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கிறோம்.

கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்தக்கூடிய முழு தகுதியும் கடமையும் திகவுக்கு உண்டு. திராவிட இயக்கத்தின் தீரராக இருந்தவர் தான் கருணாநிதி. அண்ணாவை சந்திப்பதற்கு முன்பே பெரியாரை சந்தித்தவர் கருணாநிதி. 1937 ஆம் ஆண்டு திருவாரூர் கமலாலய குளக்கரையில் பெரியார் உரையை முதல் முறையாக கேட்டதாகவும் ஆரஞ்சு நிற சால்வையை அணிந்து கொண்டு பளபளவென பெரியார் காட்சி அளித்தார்.. பேசினார் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எழுதாமல் பெரியாரின் சுற்றுப்பயண பேச்சை கேட்க போனதால் தேர்வில் தோற்றுப்போனவர் கருணாநிதி. நான் பள்ளிப்பாடத்தில் தோற்றேன். ஆனால் பெரியாரின் பள்ளிக்கூடத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்று கருணாநிதி பெருமை பட்டுக்கொண்டார். அதனால்தான் அவர் பள்ளிக்கூடத்தின் சார்பில் ஈரோடு குருகுலத்தின் சார்பில் நடப்பது மிக மிக பொருத்தம் என்று நான் கருதுகிறேன்.

அண்ணா மறைவுக்கு பிறகு சிலர் குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தார்கள். அப்பொழுது முதல்வர் பொறுப்பு வேண்டாம் என்று மறுத்தவர் கருணாநிதி. ஆனால் நீங்கள்தான் முதல்வராக வர வேண்டும். அப்போதுதான் இயக்கம் காப்பாற்றப்படும் தமிழினம் காப்பாற்றப்படும் என்று பெரியார் சொன்னார். பெரியாரின் தூதுவராக வீரமணிதான் கருணாநிதியை சந்தித்தார். அந்த வகையில் கருணாநிதியை முதல்வர் ஆக்கியதே பெரியார்தான். கருப்பும் சிவப்பும் இணைந்ததே திராவிட இயக்கம் என்பதை போல இணைந்தே இருக்கிறோம்.. இணைந்தே இருப்போம். இவ்வாறு மு.க ஸ்டாலின் பேசினார்.