மாமனிதரை இழந்துவிட்டோம்: ஒரிசா பாலு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளதாவது:-

தமிழ்குடியின் மூத்தக்குடி “தேவேந்திரகுல வேளாளர்கள்” அவர்கள் தான் உழவர்குடி மக்களாக உலகம் முழுவதும் உழவு தொழிலை கொண்டு சேர்த்தார்கள் என பல்வேறு சான்றுகள் மூலம் நிரூபித்தவர்; உலகம் முழுவதும் அதை ஆவணப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் நீண்ட தொடர்பு கொண்டவர் கடல்சார் ஆராய்ச்சியாளர் திரு. ஒரிசாபாலு அவர்கள்,

2017-ஆம் ஆண்டு வேளாண் மரபினராக “தேவேந்திரகுல வேளாளர்களை” பட்டியலை விட்டு வெளியேற்றி தன்மானத்தோடு தலைநிமிர்தல் குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பல வரலாறுகளை எடுத்துரைத்தவர், அதனை போல், 2018-ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற “வேளாண் மரபினர்” மாநில மாநாட்டிலும் கலந்து கொண்டு தமிழர் வரலாற்று மீட்பு பயணத்தை பற்றியும்; தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலை விட்டு வெளியேற வேண்டும் என்று வரலாற்று கூற்றுகளை எடுத்துரைத்தவர்.

பள்ளர்கள், மள்ளர்கள் என்ற பெயர் உலகம் முழுவது பல்வேறு நாடுகளின், கிராமங்களின் இருப்பதை ஆவணப்படுத்தியவர், தமிழின் தொன்மையான வரலாற்றை தேடி உலகளவில் கடல் வழியாக ஆய்வு பயணம் மேற்கொண்டு வந்தவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை வெளிக்கொண்டுவர நவீன தொழில்நுட்பங்களை கொண்டு ஆய்வு செய்து வந்தவர், கடல்சார் ஆராய்ச்சியாளர் திரு. ஒரிசாபாலு அவர்களின் இறப்பு உண்மை தமிழர் வரலாற்று மீட்பு பயணத்தில் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.!

ஈடு இணையற்ற கடல்சார் வரலாற்று மீட்பு ஆய்வாளர் அவர்களின் உழைப்பால் தமிழ் சமூகம் உயர்வு பெற்றோம்; அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும்; தமிழ் மண்ணில் என்றும் அவர் புகழ் மறையாது.!
கடல்சார் ஆராய்ச்சியாளர் திரு. ஒரிசாபாலு அவர்கள், மறைவிற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலை தொிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:-

தனது ஆய்வுகளின் மூலம் பண்டைத் தமிழர்களின் கடல்சார் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றிய ஆய்வாளர் ஒரிசா பாலு இயற்கை எய்தினார். கடற்கரைகளைத் தேடி ஆமைகள் வரும் கடல் நீரோட்டப் பாதைகளைப் பின்பற்றி தமிழ்க் கடலோடிகள் உலகம் முழுக்கச் சென்றனர் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர். ஒரிசாவிற்கும் தமிழ்நாட்டிற்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்தவர். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தைத் தொடங்கி தமிழரின் கடல்சார் மரபும், கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தமிழ் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் தீராத பற்று கொண்டிருந்த மாமனிதரை இழந்துவிட்டோம். அவருக்கு என் இதய அஞ்சலி. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி உறையூரில் பிறந்தவர் ஒரிசா பாலு. பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.