நவம்பர் 18-ந்தேதி 100 இடங்களில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் முகாம்: மா.சுப்பிரமணியன்

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட வந்த 60 குஜராத் மருத்துவக் குழுவினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துரையாடினார்.

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட வந்த 60 குஜராத் மருத்துவக் குழுவினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துரையாடினார். பின்னர், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் திருவள்ளூர் மற்றும் ஆவடி ரெயில் நிலையங்களுக்கு ‘ஈட் ரைட் நிலையம்’ என்ற தரச்சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக 1 கோடியே 44 லட்சத்து 82 ஆயிரத்து 353 குடும்பங்கள் உள்ளது. புதிதாக 7 லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்கள் புதிய காப்பீட்டுத் திட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மூலம் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதேபோல, நவம்பர் 18-ந்தேதி கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கும் முகாம் நடைபெறும். டெங்குவால் 4 பேர் இறந்துள்ளனர். டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.