திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதில் அதிமுக உறுதியாக உள்ளது. அதிமுகவின் இந்த உறுதியான நிலைப்பாட்டால் வலிமையாக உள்ள திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த முடியுமா? என்பது அக்கட்சியின் எதிர்பார்ப்பு. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் என ஒவ்வொரு கட்சியாக ஏதேனும் ஒருவகையில் தூது விடுவது, அசைத்துப் பார்ப்பது என்கிற பகீரத முயற்சிகளில் அதிமுக தீவிரமாக இறங்கியும் உள்ளது. பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக இல்லை என்பதால் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் ஒருவித ஊசலாட்டங்களுடன் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இருப்பதும் வெளிப்பட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் உள்ள சிஎபிம் கட்சி, பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை தங்களது தீக்கதிர் நாளேட்டில் 8 கால செய்தியாக வெளியிட்டதைக் கூட ஒரு வித ஊசலாட்டமாகவே அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர். கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிட கூடுதல் தொகுதிகளை சிபிஎம் எதிர்பார்த்தாலும் திமுக தலைமை தர தயாராக இல்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாம். இந்த வருத்தத்தைத்தான் இப்படி ஊசலாட்ட செய்திகள் மூலம் வெளிப்படுத்தியதாம் சிபிஎம். ஆனால் சிபிஎம் நிலைப்பாடு தொடர்பாக திமுக தலைமையும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சிபிஎம் மாநில தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆசிரியர்- அரசு ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் பேசியதாக கூறப்பட்டது. இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்க முடிவு செய்துள்ளோம். அதற்காக அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஎம் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.