ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5ஆவது நாளாக தொடரும் ரெய்டு!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இன்று ஐந்தாவது நாளாக ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது.

எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் ஜெகத்ரட்சகன். அதிமுக சார்பில் எம்பியாக இருந்த அவர், அதைத் தொடர்ந்து ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி நடத்தி வந்தார். கடந்த 2009இல் அவர் திமுகவில் ஐக்கியமானார். திமுக சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வற்றை நடத்தி வருகிறார். இதற்கிடையே இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது. ஏற்கனவே கடந்த 2020இல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. தொடர்ந்து சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு புகாரில் அவரது ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் ஐடி துறை மீண்டும் சோதனையை ஆரம்பித்தது. ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவக் கல்லூரி என அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறை அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் ஐந்தாவது நாளாக இன்றும் ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது. பல இடங்களில் சோதனை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை அடையாற்றில் உள்ள அவரது வீடு, தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், பாரத் பல்கலைக்கழகம், பாலாஜி மருத்துவ கல்லூரி, சவீதா கல்வி குழுமம் ஆகியவற்றிலும் ரெய்டு தொடர்ந்து நடக்கிறது. வரி ஏய்ப்பு புகாரில் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான பல இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

இந்த ரெய்ட்டில் என்னவெல்லாம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த வருமானவரித்துறை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், ரெய்டின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.