எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலைத் தனது ஆய்வின் மூலம் உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய கிளாடியா கோல்டின் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிளாடியா கோல்டின், பல நூற்றாண்டுகளாகப் பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்கு பற்றி உலகளவில் முதல் முறையாக விரிவான கணக்கீட்டை வழங்கினார். அவரது ஆராய்ச்சியில் பல்வேறு மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் பாலின சம்பள இடைவெளி உருவாக முக்கிய ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெளியிடுவதில் கடைசி விருது தான் இந்த எக்னாமிக் சையின்ஸ் பிரிவு விருது. இந்த விருதைத் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீட்டை ஆய்வு செய்து ஒரு பெண் பெற்றுள்ளதன் மூலம் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கிளாடியா கோல்டின் ஆய்வில் தொழிலாளர் சந்தையில் பாலின வேறுபாடுகளுக்கான முக்கியக் காரணங்கள் கண்டறியப்பட்டது. மேலும் உலகளாவிய தொழிலாளர் சந்தையில் பெண்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். மேலும் வேலை செய்யும் பெண்கள், ஆண்களை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். கோல்டின் தனது ஆய்வுக்காகச் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளையும், கோப்புகளையும் சேகரித்தார். இதை அடிப்படையாக வைத்து வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி, ஏன் மாறிவிட்டன என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை முன்வைத்தார். மேலும் கிளாடியா கோல்டின் ஆய்வில் 200 ஆண்டுகளில் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீடு ஏறுமுகத்தில் இல்லாமல் U அமைப்பிலான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பதை நிரூபித்தார். இதேபோல் திருமணமான பெண்களின் தொழிற் சந்தையில் பங்கேற்பு 19 நூற்றாண்டின் முற்பகுதியில் விவசாயச் சமூகத்திலிருந்து தொழில்துறை சமூகமாக மாறியதும் குறைந்தது. ஆனால் இதே திருமணமான பெண்களின் தொழிற் சந்தையில் பங்கேற்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேவைத் துறையின் வளர்ச்சி அடைந்த போது அதிகரிக்கத் தொடங்கியது எனக் கிளாடியா கோல்டின் தனது ஆய்வில் ஆதாரங்கள் உடன் காட்டியுள்ளார்.