காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை: அமைச்சர் ரகுபதி!

காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும், பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பேசுகிறார் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் பாஜகவை அதிமுக பாதுகாக்கிறது. கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காண முடியாது என்பதால்தான் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறோம். காவிரி நதி நீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தை தீர்ப்பை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் தீர்வு காணும் முழு பொறுப்பு மத்திய அரசுக்கு தான் உண்டு என்பதை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். பல ஆண்டுகளாக பேசி தீர்வு காண முடியாததால் காவிரி நீரை பெற்றோம். காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகிறார். காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும், பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். காவிரி விவகாரத்தில் முழுமையான தீர்வு காண மத்திய அரசால்தான் முடியும். பாஜக கூட்டணியில் இருந்த போது காவிரி தொடர்பான நிபந்தனையை அதிமுக ஏன் வைக்கவில்லை. காவிரி நீர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்கள் நேரடியாக மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆணையம், குழு அமைக்கப்பட்ட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.