அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி, இன்று (அக்.11) வரை நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு சபாநாயகர் அளித்த விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேர் நீக்கம் குறித்து 10 முறை கடிதம் கொடுத்தும், சபாநாயகர் எங்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். சபாநாயகர் இருக்கை ஒரு புனிதமான ஆசனம். அதில் அமர்ந்து அவர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள், ரூ.2,893.15 கோடி நிதி ஒதுக்கவும், 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்த பிறகு, புதிய பணிகள் மற்றும் புதிய துணை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதற்கு, பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசின் முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது, நிதியாண்டு 2014-15 முதல் 2021-22 வரை, மத்திய அரசின் நேரடி வரியில், தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், வரி பகிர்வாக இந்த காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடிதான். இதே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நிலைமைகள் வேறாக இருக்கிறது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கி, இன்று வரையிலான மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில்,போக்குவரத்து வாகனங்களுக்கான கட்டண உயர்வு, ஓய்வுபெற்ற எம்எல்ஏக்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட 10 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, குறுசிறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு, பட்டாசு ஆலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.