குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2030க்குள் நிலையான வளர்ச்சி இலக்கு என்ற காலக்கெடு நெருங்கி வரும் நேரத்தில் பெண் குழந்தைகள் விஷயத்தில் உலகம் தோல்வியடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(அக். 11) சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
2030 ஆம் ஆண்டுக்குள் எதுவும் மாறாவிட்டால் 11 கோடி பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் வகுப்பறைகளில் இருக்கமாட்டார்கள். மேலும் 34 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் இன்னும் கடுமையான வறுமையில் இருப்பார்கள். பெண்களுக்கு எதிரான பழமையான பாகுபாடுகள் தொடர்ந்து வருகின்றன. சில நேரங்களில் அது இன்னும் மோசமாகி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். கல்வி அல்லது பொருளாதார சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சார்பு மற்றும் சமத்துவமின்மையின் புதிய வடிவங்கள் உருவாகி வருகின்றன. டிஜிட்டல் பிளவு(தொழில்நுட்பம் மிகுந்த மற்றும் நவீன தொழில்நுட்பம் இல்லாத/கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் உள்ள இடைவெளி) மூலமாக பல பெண்கள் ஆன்லைன் உலகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஆன்லைன் உலகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
உலகம் முழுவதும் பெண்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர் பாலினத்தை எதிர்கொள்கின்றனர், ஒரே மாதிரியான விஷயங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். மாற்றத்தை உருவாக்குகின்றனர். நாம் அவர்களுடன் நிற்க வேண்டும். பெண்களின் தலைமைத்துவத்தில் நாம் முதலீடு செய்ய வேண்டும். நடப்பாண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் – பெண்கள் தங்கள் லட்சியங்களை அடையவும் பாலின சமத்துவத்தை அதிகரிக்கவும் ஆதரவளிக்க வேண்டும். பெண்களும் சிறுமிகளும் ஒன்றை வழிநடத்தும்போது, அவர்கள் அதன் அணுகுமுறைகளை மாற்றலாம், மாற்றத்தை உருவாக்கலாம், முன்னேறலாம். தேவைகளை நிவர்த்தி செய்யும் கொள்கைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவார்கள்.
உலகளாவிய முயற்சிகள் இருந்தபோதிலும், பாலின சமத்துவத்தை அடைவதில் உலகம் பின்தங்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை (United Nations Department of Economic and Social Affairs) கடந்த செப்டம்பரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், 34 கோடிக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் (உலகத்தில் உள்ள பெண்களில் 8% பேர்) 2030 ஆம் ஆண்டில் தீவிர வறுமையில் வாழ்வார்கள், மேலும் நான்கில் ஒருவர் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவர்.
அதிகாரம் மற்றும் தலைமைப் பதவிகளில் பாலின இடைவெளி வேரூன்றி காணப்படுகிறது. மேலும் தற்போதைய விகிதப்படி, அடுத்த தலைமுறை பெண்கள், ஆண்களைவிட சராசரியாக ஒரு நாளைக்கு 2.3 மணி நேரம் ஊதியம் இல்லாத பராமரிப்பு, வீட்டு வேலைகளில் செலவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.