இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள பார்வதி குண்டில் உள்ள சிவனின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஆதி கைலாஷில் வழிபாடு மேற்கொண்டார்.
பிரார்த்தனையின் போது பிரதமர் மோடி பழங்குடிகளின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற அங்கியை அணிந்திருந்தார். அவருக்கு உள்ளூர் பூசாரிகளான விரேந்திர குடியால் மற்றும் கோபால் சிங் ஆகியோர் வழிகாட்டினர். பிரதமர் மோடி புனிதமான ஜோலிங்காங் மலையின் முன்பு அமர்ந்து தியனம் செய்தார். பனி சூழ்ந்த உத்தராகண்ட் மலைகளுக்கும் அவர் பூஜைகள் செய்தார். மேலும் அவர் பார்வதி குண்டின் அடிவாரத்தில் இருந்த சிவன் பார்வதி கோயிலில் ஆராத்தி எடுத்து பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து 15 கிமீ தொலைவில் உள்ள பழமையான சிவன் கோயிலான ஜாகேஸ்வர் தாம் கோயிலுக்குச் செல்கிறார்.
இதனிடையே பிரதமர் மோடி குஞ்ஜி கிராமத்துக்கு சென்ற போது அங்கு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுடன் உரையாற்றினார். அங்கு பிரதமருக்கும், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உத்தராகண்டில் பிரதமர் மோடி ரூ.4,200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து குமானோன் பகுதியில் உள்ள வால்டியா விளையாட்டு அரங்கில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதனிடையே பிரதமர் மோடியின் உத்தராகண்ட் பயணத்தை பாஜக அரசின் பாசாங்குத்தனம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நீங்கள் உத்தராகண்டில் இருப்பது நல்லது. ஆனால் உங்கள் அரசு புனிதமான கங்கை நீருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது. வீட்டில் இருந்து புனித கங்கை நீரை ஆர்டர் செய்து வாங்குபவருக்கு என்ன சுமையாக இருக்கும் என்று என்னால் யோசிக்க முடியவில்லை. உங்கள் அரசின் கொள்ளை மற்றும் பாசாங்கு தனத்தின் உச்சம் இது” என்று விமர்சித்துள்ளார்.