பாஜக மூத்த தலைவர் எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச் ராஜா சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று தனது சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹெச் ராஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அவரது எக்ஸ் பதிவும் உறுதிப்படுத்தியது. அதாவது எச் ராஜா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எச் ராஜாவுக்கு நேற்று திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததால் அவருக்கு ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்து ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை எச் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். எச் ராஜாவை தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று நலம் விசாரித்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், “உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த தலைவர் சகோதரர் எச் ராஜா அவர்களை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தேன். மருத்துவர்களிடம் அவரின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தேன். அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற இறைவனை பிராத்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.