ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் வழக்கையும் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2006 – 11 கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். 2008ஆம் ஆண்டு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மு.கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்ததாக அதிமுக குற்றம்சாட்டியது.

அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வீட்டு வசதி வாரிய விவகாரம் தொடர்பாக ஐ.பெரியசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு கடந்த பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஐ.பெரியசாமிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை கடந்த மார்ச் மாதம் விடுவித்தது.

அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்து அதிரடி காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கையும் கையிலெடுத்து மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாக அறிவித்தார். இதுதொடர்பாக ஐ.பெரியசாமி பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் சுழற்சி முறையில் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டதால், அரசியல் வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தொடர்பாக எந்த நோட்டீஸும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று வாதிட்டார். இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதி சென்னையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்திற்கும், திண்டுக்கல்லில் உள்ள அவரது நிரந்தர முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதேபோல அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கும் விசாரணைக்கு வந்தது. வளர்மதி தரப்பில் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க அதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 1ம் தேதிக்கே தள்ளிவைத்தார்.