மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது பாதுகாப்பை ‘ஒய்’ பிரிவில் இருந்து ‘இசட்’ பிரிவுக்கு மேம்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கருக்கு 68 வயது ஆகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், ரஷ்யா, சிங்கப்பூர், ஜப்பான்,அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக இருந்தார். இந்திய வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.பல்வேறு மொழிகளை பேசக்கூடியவர். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றான வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் இருக்கிறார். இவருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதை டெல்லி போலீஸார் அளித்து வந்தார்கள். இந்நிலையில் அவரது பாதுகாப்பு ‘இசட்’பிரிவுக்கு மேம்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக ஜெய்சங்கரின் பாதுகாப்பை டெல்லி போலீஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) ஏற்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த இசட் பிரிவு பாதுகாப்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் எங்கு சென்றாலும், சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 14 முதல் 15 வீரர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள். நாட்டில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட நாட்டில் 176 பேருக்கு துணை ராணுவப்படையின் விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.