கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் அங்கமான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (Office for the Coordination of Humanitarian Affairs) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காசா பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்காமல் இஸ்ரேலியப் படைகள் தாக்கிவரும் சூழலில் உயிருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். கடைசித் தகவலின்படி காசாவிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலில் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் பல சேதமடைந்துள்ளன. காசாவில் இருந்து இதுவரை வெளியேறியவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஐ.நா.வின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 27 ஆயிரம் பேர் பாலஸ்தீன அரசு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சுமார் 1.50 லட்சம் பேர் காசாவின் தெற்கில் மைதானங்களில், பொது கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 752 குடியிருப்பு கட்டிடங்களும், பிற கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன. 1948-க்குப் பின்னர் இதுவே இந்தப் பிராந்தியத்தின் மிக மோசமாக தாக்குதல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் தண்ணீர், சுகாதார வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை அங்கே 6 கிணறுகள், 3 நீரேற்று நிலையங்கள், ஒரு தண்ணீர் ஊற்று மற்றும் ஒரு நீர் சத்திகரிப்பு நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு, தண்ணீரின்றி வாடிவருகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் தீவிர தாக்குதல் பகுதிகளில் 11 லட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக மீட்காவிட்டால் அத்தனை பேரும் பட்டினியாலேயே உயிரிழக்க நேரிடும் என்றும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. ஐ.நா. பள்ளிகளிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், தரைவழி தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்டு ஹெக்ட் தெரிவித்துள்ளார். ஹமாஸ் போராளிகளின் நுக்பா படைகளின் இருப்பிடங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இவர்கள்தான் கடந்த வாரம் ராக்கெட்குண்டு தாக்குதல் நடத்தியவர்கள்.
ஹமாஸ் கடற்படையின் மூத்த தலைவர் வீட்டில் ஏராளமான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்த் லாகியா நகரில் நடத்திய வான் தாக்குதலில் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.