நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்காமல் இருப்பது தேசத்துக்கே அவமானம்: சீமான்

ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது அவருக்கு மட்டும் அவமானம் இல்லை. தேசத்துக்கே அவமானம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது அவருக்கு மட்டும் அவமானம் இல்லை. தேசத்துக்கே அவமானமாகும்.

காவிரி தண்ணீரை வைத்து கர்நாடக மாநிலம் அரசியல் செய்கிறது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால், ஒரு யூனிட் மின்சாரமும் இல்லை என்ற நிலை வர வேண்டும். இதை திமுக கேட்காது, பேசவும் செய்யாது. ஒரு நாட்டில் உள்ள எல்லா வளங்களும் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்ற நிலை வந்தால் தான் தேசப்பற்று பெருகும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இப்போதுள்ள சூழ்நிலையில் செயல் அரசியல், சேவை அரசியல் எல்லாம் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே இங்குள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய உள்ளன.

அய்யா ஸ்டாலின் காலை உணவு திட்டத்தில் உப்புமா கொடுக்கிறார். அதை நீங்கள் எடுத்து சாப்பிட்டால் உங்கள் உடம்புக்கு ஒட்டுமா? திமுக ஒரு உப்புமா கம்பெனி. முதல்வர் காலை 9 மணிக்கு வருகிறார் என்றால் சாலையில் காலை 6 மணி முதலே போலீஸார் பந்தோபஸ்துக்கு நிற்கிறார்கள். அவர்களால் இயற்கை உபாதைகளை கூட கழிக்க இயலாத சூழல் நிலவுகிறது. இது மாதிரி உலகில் ஒரு மனித வதை, கொடுமை இருக்கிறதா சொல்லுங்கள். சொந்த நாட்டில் நடமாட எதுக்கு இத்தனை பாதுகாப்பு. நான் பாருங்கள் இத்தனை ஆயிரம் பேருக்கு நடுவில் பேசுகிறேன். எனக்கு என்ன பிரச்சினை? நான் என்ன என் தம்பி அண்ணாமலையா, இசட் பிரிவு ஒய் பிரிவு பாதுகாப்பெல்லாம் வச்சிக்கிட்டு போறதுக்கு? நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக்கெதுக்கு பாதுகாப்பு? அதிகாரம் இல்லாமல் 2 சீட்டு, 3 சீட்டு வச்சிக்கிட்டு என்ன செய்யுறது.

கடந்த தேர்தலில் நான் இஸ்லாமியர்களுக்கு இடம் கொடுத்தேன், திமுக எத்தனை பேருக்கு கொடுத்தது, ஆனால் நீங்கள் எனக்கு எத்தனை வாக்கு போட்டீங்க, திமுகவுக்கு எத்தனை போட்டீங்க. வீரப்பன் இருந்த போது காட்டுக்குள் மரங்கள் பாதுகாப்பாக இருந்தன. வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சினை வந்திருக்குமா என யோசித்து பார்க்க வேண்டும். நாகப்பாவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா, அதுதான் தமிழன் மாண்பு. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.