தெலுங்கானாவில் குரூப்-2 தேர்வு தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் போராட்டம் வெடித்த நிலையில் பி.ஆர்.எஸ். பாஜக கட்சிகளை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வு கடந்த ஆகஸ்டில் நடைபெறுவதாக இருந்த நிலையில் வினாதாள் வெளியானதால் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் அறிவிப்பால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. 23 வயது பெண் ஒருவர் ஐதராபாத்தில் தங்கி குரூப்-2 தேர்வுக்கு படித்து வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தேர்வு ஒத்திவைப்பு குறித்து தனது உறவினர்களிடம் புலம்பி கொண்டிருந்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அந்த பெண் தங்கி இருந்த விடுதிக்கு அருகே குவிந்த இளைஞர்கள் தற்கொலைக்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தெலுங்கானா இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தால் தவித்து வருவதாக கூறியுள்ளார். இளைஞர்களின் கனவுகள், நம்பிக்கைகள் கொல்லப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள ராகுல் காந்தி, கடந்த 10 ஆண்டுகளில் பி.ஆர்.எஸ். மற்றும் பாஜக மாநிலத்தை சீரழித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தை ஒரே மாதத்தில் சீரமைத்து ஓர் ஆண்டுக்குள் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை ராகுல் நினைவு கூர்ந்துள்ளார்.