காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மக்கள் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் காசாவின் வடக்கே உள்ளவர்கள் தெற்கு நோக்கிச் செல்ல இஸ்ரேல் அவகாசம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் பக்கத்தில், “உங்களின் பாதுகாப்பும், உங்களது குடும்பத்தினரின் பாதுகாப்பும் மட்டும்தான் முக்கியம். எங்கள் அறிவுரைகளைக் கேட்டு தெற்கே செல்லுங்கள். ஹமாஸ் தலைவர்கள் எல்லோரும் ஏற்கெனவே, அவர்களுடைய குடும்பத்தினரை பாதுகாத்துக் கொண்டுவிட்டனர். அவர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். எனவே நீங்கள் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். நாங்கள் குறிப்பிடும் வழித்தடத்தில் சென்று சேருங்கள். அந்த மூன்று மணி நேரத்தில் எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது” என்று பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேலை நோக்கி லெபனானில் இருந்து ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதில் இதுவரை இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்தச் சூழலில் இஸ்ரேல் – லெபனான் எல்லைக்கு ராணுவம் சீல் வைத்துள்ளது. முன்னதாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் சரியான நேரத்தில் ஹமாஸுக்கு ஆதரவாக சேர முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் காசாவில் வான், கடல், தரைவழி என மூன்று முனைத் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) அறிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவ அறிக்கை வெளியாகியுள்ளது. முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார். பின்னர் அளித்தப் பேட்டியில், ‘இனிமேல் தான் நிறைய நடக்கவுள்ளது’ என்று கூறினார். அதனைத் தொடர்ந்து இத்தகைய அறிக்கையை ராணுவம் வெளியிட்டுள்ளது.
காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் படையின் நக்பா பிரிவின் தலைவர் பிலால் அல் கத்ரா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவிலிருந்து வெளியேற மக்கள் விரும்பினாலும்கூட ஹமாஸ் படையினர் அவர்களை தடுத்து நிறுத்துவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கு காசா பகுதியில் உள்ளமருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். அவர்களின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளன. வடக்கு காசா பகுதியில் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெறுவோருக்கு மனிதாபிமான அடிப்படையில் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். அவர்களை எகிப்து எல்லைப் பகுதிக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.