காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்து வரும் நிலையில், ஆளுநரிடம் கோரிக்கை வைத்த கர்நாடகா விவசாயிகள்.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்து வரும் நிலையில், இதற்கு முன்பு தண்ணீர் திறக்கச் சொன்னபோதெல்லாம் அங்கு கடும் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற நிலையில் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் என்று அவர்கள் வாதம் வைத்தனர். இதனால் கர்நாடகாவில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவின் மைசூருவிலுள்ள கபினி அணை மற்றும் மாண்டியாவிலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததாலும், கர்நாடகம் சரியாக தண்ணீரை திறக்காததாலும் போராட்டங்களை ஒத்திவைத்தனர். எனினும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரே திறந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் பிடிவாத கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபர் 31 வரை தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாததால் காவிரி ஆணையம் கூடி இதனை அப்படியே உத்தரவாக போட்டது. ஆனால், தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறக்காமல் உபரி நீரையே திறந்து வருகிறது கர்நாடகா.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதேபோல காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதேபோல கர்நாடகாவிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று போராடும் கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர்கள், அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாத்தை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை கூட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் பேசிய குருபுரு சாந்தகுமார், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டி தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் கர்நாடகாவில் அதுபோன்ற நடவடிக்கைகள் எதுவுமில்லை எனவும் குருபுரு சாந்தகுமார் சுட்டிக்காட்டினார். ஆகவே, பெங்களூரு குடிநீர் பிரச்னை குறித்து விவாதிக்கவும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றவும் ஆளுநர் தலையிட்டு சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றார்.