‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது அவரவரின் உரிமை, இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை: நாராயணன் திருப்பதி

“மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடக்கூடாது என்று சொல்லுகிறீர்கள். சரி. அப்படியானால் இந்துக்களுக்கு எதிரே யாரும் அல்லாஹு அக்பர் என்றும், இயேசு அழைக்கிறார் என்றும் சொல்லக்கூடாது என உங்களால் தடுக்க முடியுமா?” என்று நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தான் தற்போது உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. அந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக அவுட் ஆகி செல்லும் போதும், அங்கிருந்த இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களை கூட முகம் சுளிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விளையாட்டுப் போட்டியில் மத ரீதியிலான கோஷம் எழுப்ப வேண்டிய அவசியம் எதற்கு? என ஒருதரப்பினரும், அப்படி கோஷம் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? என மற்றொரு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள். இதனிடையே, ரசிகர்கள் இவ்வாறு கோஷமிட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

ஐயோ! பொது வெளியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறார்களே என்று பதை பதைத்து போகின்றனர் மத சார்பற்ற நல்லவர்கள் சிலர். சரி.. இனிமேல், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பொதுவெளியில் தங்கள் கடவுள்கள் குறித்து எந்த கோஷங்களையோ, வழிபாடுகளையோ, பிரச்சாரங்களையோ செய்யக்கூடாது என்று சொல்ல துணிச்சல் உங்களுக்கு உள்ளதா? எந்த மதத்தையும் நாம் இழிவுபடுத்தவோ அல்லது எந்த மத சுதந்திரத்தையும் தடுக்கவோ கூடாது, அது முடியவும் முடியாது. அது தான் மத சார்பற்ற தன்மை.

மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லக்கூடாது என்றால், இனி ஹிந்துக்களின் எதிரில் நின்று யாரும் ‘அல்லாஹு அக்பர்’ என்றோ, ‘இயேசு அழைக்கிறார்’ என்றோ சொல்லக்கூடாது என்று கோரிக்கை விடுப்பார்களா இவர்கள்? அல்லாஹூ அக்பர் என்றும், இயேசு கிறிஸ்து என்றும் சொல்வது அவரவர் உரிமை என்றால் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதும் அவரவரின் உரிமையே. இதில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.