விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது தவறில்லை என்றால் கோஷமிடுவதும் தவறில்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. போட்டியில் முன்னதாக விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் வீரர் ரிஸ்வான் 49 ரன்களில் அவுட்டானார். அவர் மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, “முகமது ரிஸ்வானுக்கு எதிராக பார்வையாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் கீழ்த்தரமானது” என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவினர் பலரும் ஆதரவாக கருத்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்திற்கு ஆதரவாக கருத்துக்கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது எப்படி தவறில்லையோ அதே போல ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது தவறில்லை என்றும் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். விளையாட்டின்போது பிரார்த்தனை என்று வானதி சீனிவாசன் கூறுவது பாஜக ஆதரவாளர்கள் கூறுவதை போல இஸ்லாமிய விளையாட்டு வீரர்கள் சிலர் மைதானத்திற்குள் தொழுகை நடத்துவதைதானா என்பது தெரியவில்லை. ஆனால் மறைமுகமாக அவர் இதைத்தான் சொல்கிறார் என்று கூறப்படுகிறது.