மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி மதுரை அரசரடியிலுள்ள 11.45 ஏக்கர் பரப்புள்ள ரயில்வே மைதானம், 29.16 ஏக்கர் பரப்புள்ள ரயில்வே காலனி நிலம் உள்பட மொத்தம் 40.61 ஏக்கருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலங்களை வணிக பயன்பாட்டுக்கு தனியாருக்கு கொடுப்பதற்காக ‘ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம்’ தங்கள் வசம் ஒப்படைக்குமாறு, மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடியிலான நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ரயில்வே சொத்து மக்களின் சொத்து, தேசத்தின் சொத்து, அதனை தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்கமாட்டோம்.
அரசரடி ரயில்வே மைதானம் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கிய மைதானமும், ரயில்வே காலனியும் மதுரையின் அடையாளங்களாக உள்ளன. இவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். இந்நிலத்தை பாதுகாக்க மதுரை மக்கள் மாபெரும் போராட்ட இயக்கத்தை முன்னெடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.