“படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு அதிமுக இருக்காது என நப்பாசை கொண்டவர்களுக்கு பேரிடி விழும் வகையில் ஜெயலலிதா அவர்கள் கட்சியை இணைத்து, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி இருக்காது என்று சொன்னவர்கள், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி உள்ளார். தமிழ்நாட்டை 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, மீண்டும் ஆளப்போகும் கட்சி, இதன் அடிப்படையில்தான் கட்சியின் 52ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது என கூறினார்.
கேள்வி:- லியோ திரைப்படத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதா?
பதில்:- எங்கள் ஆட்சி காலத்தில் திரைத்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டோம். இதே விஜய் எடப்படியாரை சந்தித்த பின்னர் ரிலீஸ் செய்யப்பட்டது. இன்று லியோ படத்தை ரெட் ஜெயண்டிற்கு தர வேண்டும். அப்படி தராததால் எல்லா விதமான தொல்லைகள், பிரச்னைகள் தரப்படுகிறது. ரெட்ஜெயண்ட் ஆட்சிக்கு வருவதற்கு முன் 10 ஆண்டுகளில் 20 முதல் 30 படங்களை மட்டுமே வெளியிட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது.
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில், நடிகர் அஜித் என்ன சொன்னார். “நான் அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன்” என்ற சொன்னார். திரைக்கலைஞர்களை பயமுறுத்தி அச்சுறுத்தி சர்வாதிகாரம் கோலோச்சப்படுகிறது. எங்கள் ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். லியோ படம் தொடர்பாக நீதிமன்றம் சென்று உள்ளனர். என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி:- கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு ஆண்டு விழா நாளில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:- அவர்கள்தான் அடையாளம் இல்லாமல் போய்விட்டார்களே, எல்லோரும் இங்கேதானே இருக்கிறோம்.
கேள்வி:- குழந்தைகள் திருடப்பட்ட விவகாரத்தில் கட்சி சாயம் பூசுகிறீர்களே?
பதில்:- ஆட்சியாளர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் காவல்துறை செயல்பட வேண்டும். எங்கள் ஆட்சியில் காவல்துறையில் சுதந்திரம் இருந்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகமான அளவுக்கு உள்ளது.
கேள்வி:- காய்ச்சலுக்கு குழந்தைகள் தொடர்ந்து இறந்து வருகின்றனரே?
பதில்:- திமுக ஆட்சிக்கு வரும்போதுதான் விதமான காய்ச்சல்கள் வரும். மஞ்சள் காய்ச்சல், தக்காளி காய்ச்சல் உள்ளிட்டவை திமுக ஆட்சியில்தான் வந்தது. அமைச்சர் சுப்பிரமணியம் ஓட்டப்பந்தையம்தான் ஓடிக்கொண்டிருக்கிறாரே தவிர, டெங்கு காய்ச்சலால் அவதிப்படும் மக்களின் வாட்டத்தை தீர்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.