ஹமாஸ்களின் ஆதிக்கத்தில் உள்ள காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை மூலம் குண்டுகள் வீசப்பட்டடிருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தில் 500 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு பெரும் கண்டனங்கள் உலகம் முழுவதும் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிவிட்டதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல் பாலஸ்தீனத்தின் ஏவுகணை தான் தவறுதலாக விழுந்திருக்கும் என்று இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் கடந்த அக்டோபர் 7 ம் தேதி போர் தொடங்கியது. சுமார் 11 நாட்களை கடந்தும் போர் தீவிரமாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உள்ள பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. பதிலுக்கு ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டுகளை வீசி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து ஏராளமான ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரையும் மீட்க முடியாத நிலை நீடிக்கிறது.
இந்த சூழலில்மிக கொடூரமாக காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனை முழுவதும் மரண ஓலம் காணப்படுகிறது.
இதனிடையே இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்கிறார். இன்று இஸ்ரேல் அதிபரை சந்தித்து பேசும் ஜோ பைடன், பின்னர் ஜோர்டன் செல்வதாக இருந்தது. காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு காரணமாக ஜோர்டான், எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தின் தலைவர்களுடனான சந்திப்பிற்காக ஜோர்டானுக்கான தனது பயணத்தை ஜோ பைடன் கைவிட்டுள்ளார்.
இதனிடையே காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து டுவிட்டரில் தனது கவலையை ஜோ பைடன் வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், காசாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் நான் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரிடம் பேசினேன். மேலும் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்குமாறு எனது தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். மோதலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற அப்பாவிகளுக்கு அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிவிட்டதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல் பாலஸ்தீனத்தின் ஏவுகணை தான் தவறுதலாக விழுந்திருக்கும் என்று இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளது. இருவருமே மாறி மாறி குற்றம்சாட்டுவதால் யார் வீசியது என்பது தெரியவில்லை. காசா பகுதி குண்டு வீச்சால் மிக மோசமான நிலையில் இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா சார்பில் அண்மையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மொசாம்பிக், காபோன் ஆகிய 5 நாடுகள் ஆதரவு அளித்த போதிலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. போதிய வாக்குகள் கிடைக்காததால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. எனினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாட்கள் பயணமாக நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருவரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து விரிவாக ஆலோசித்தார்கள்.
பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ரஷ்யஅதிபர் புதின் தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபரின் இந்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் போரை எப்படி நிறுத்த வழிதெரியாமல் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கவலை அடைந்துள்ளன.