என் அலுவலகத்தில் கொசு அடிப்பதே வேலையாக உள்ளது: வானதி சீனிவாசன்

கோவையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ளே சென்றால் முதல் 10 நிமிடம் கொசு அடிப்பதே வேலையாக உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறினார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ளே சென்றால் முதல் 10 நிமிடம் கொசு அடிப்பதே வேலையாக உள்ளது. மக்கள் நலன் என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு ஆளுங்கட்சியினர் எப்படி சுயநலமாக ஆதாயம் அடையளாம் என்பதே நோக்கமாக உள்ளது என கூறினார்.

கோவையில் மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் வாரத்திற்கு ஒரு முறை நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் அதிகாரிகளால் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட முடிவில்லை என்றார்.

பாஜக உடன் இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லட்டும், எங்கள் கருத்தை நாங்கள் முடிவெடுத்துவிட்டு சொல்கிறோம் என்றார்.

லியோ திரைப்படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் குறித்த கேள்விக்கு, திரைத்துறை திமுக அரசின் ஆட்சியில் ஆட்சியாளர்களுக்கு செழிப்பாக உள்ளது. எந்த படம் வந்தாலும் ரெட்ஜெயண்ட்தான். ரெட்ஜெயண்டை தாண்டி எந்த படம் வந்தாலும் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இல்லை என்றால் அரசிடம் இருந்து நெருக்கடி கிடைக்கும் என்பதை இதில் பார்க்கிறோம். இதற்கு முன்பாக இவர்கள் ஆட்சி தூக்கி எரியப்பட்டதற்கான காரணமே திரைத்துறைதான். இதே தவறைதான் திரும்பவும் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

சிறுகுறு நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, கோவையில் அதிகமான எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் உள்ளது. சோலார் மூலம் மின்சாரத்தை எம்.எல்.எம்.இ நிறுவனங்களே சொந்த பணத்தை போட்டு தயாரிக்க முன் வந்தாலும் அதற்கும் மாநில அரசு பணம் கேட்கிறது என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.