இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை கடந்த 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேதியில் கப்பல் சேவை தொடங்கப்படவில்லை. நிர்வாக காரணங்களால் கப்பல் போக்குவரத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், 12ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தேதியிலும் கப்பல் சேவை இயக்கப்படாமல் அக்டோபர் 14 ஆம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.
நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர். அதன் பிறகு காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கி கப்பல் புறப்பட்டது. நாகையில் இருந்து இலங்கைக்கு செல்ல இந்த கப்பலின் பயண கட்டணம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ. 7,670 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடக்க விழாவை முன்னிட்டு, ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு காங்கேசந்துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் புறப்பட்டு வந்த கப்பல் நாகை துறைமுகத்தை மாலை 5.15 மணிக்கு வந்தடைந்தது.
அடுத்த நாள் கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் 20 ஆம் தேதியுடன் நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் தங்கியுள்ள பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். இலங்கையில் இருந்து சொந்த ஊர் திரும்ப காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேநேரம், மீண்டும் கப்பல் சேவை ஜனவரி மாதம் முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.