சிபிஐயின் சொத்துக்குவிப்பு வழக்கினை ரத்து செய்யக்கோரி கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கினை அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்த நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகா துணைமுதல்வர் மீதான வருமானத்துக்கு அதிமான சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன், டிகே சிவகுமாரின் மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் ரத்து செய்த நீதிபதி, வழக்கில் சிபிஐ 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்த கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பெலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரணை செய்ததது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, “இந்த வழக்கில், 90 சதவீதம் விசாரணை முடிந்துவிட்டது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட தவறான அறிக்கையின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணைக்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து தடை நீக்க மறுத்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக நவ.7ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி டி.கே.சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.