இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு வருகை!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுள்ளார்.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு இருதரப்பு மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு வேகமாக அதிரித்து வருகிறது. அங்கு இதுவரை 3,478 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

ஹமாஸ்-ன் தாக்குதலை அடுத்து அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா தனது போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியது. மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் இஸ்ரேலுக்குச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நேற்று (புதன்கிழமை) இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்டோரைச் சந்தித்து அமெரிக்காவின் ஆதரவை நேரில் தெரிவித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார். தனது இஸ்ரேல் வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “துக்கத்தில் உள்ள நாடான இஸ்ரேலில் நான் இருக்கிறேன். நான் உங்களுடன் (இஸ்ரேலிய மக்கள்) வருந்துகிறேன். பயங்கரவாதம் என்ற தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன் – இப்போதும் எப்போதும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரிஷி சுனக் அலுவலகம் வெளியிட்ட பதிவில், “பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் இசாக் ஹெர்ஜோக் உள்ளிட்டோரை சந்திப்பார். இந்த மோதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பார். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மிகப் பெரிய துயரம். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கொடூர தாக்குதலை அடுத்து ஏராளமான அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.