கலால் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நவம்பர் 22 வரை நீட்டிப்பு!

கலால் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நவம்பர் 22 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் சிபிஐ தலைமையகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிசோடியா, ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நவ. 22 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இரு நாள்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் நடைபெற்ற விசாரணையில், மணீஷ் சிசோடியாவை காலவரையின்றி காவலில் வைத்திருக்க முடியாது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், குற்றச்சாட்டு மீதான வாதங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.