காசா நகரம் நரகத்தின் வாயிலாக மாறியிருக்கிறது: ஐ.நா. வேதனை!

காசா நகரம் கடந்த சில வாரங்களாக நரகத்தின் வாயிலாக மாறியிருக்கிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்த ஜூலியடே டோமா கூறியுள்ளார்.

“காசா நகரம் கடந்த சில வாரங்களாக நரகத்தின் வாயிலாக மாறியிருக்கிறது” என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்த ஜூலியடே டோமா கூறியுள்ளார். மேலும் அவர் “முற்றுகையிடப்பட்டுள்ள காசா மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, நிவாரணப் பொருள்களுடன் 20 லாரிகள் எல்லையில் காத்திருக்கும் நிலையில், எகிப்து ராஃபா சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்றைக்குள் காசாவுக்குள் லாரிகள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுக்க, இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் காசா நகரை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. இதனால் நகருக்குள் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள்கள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனிடையே, காசாவாசிகள் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில் மற்றொரு இரவைக் கடந்துள்ளனர். ராஃபா எல்லை இன்னும் சீரமைக்கப்படாததால் நிவாரணப் பொருள்கள் எப்போது வரும் என்ற நிச்சயமற்ற நிலையில் காசாவாசிகள் உள்ளனர்.

காசா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பல இடம்பெயர்ந்த மக்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் (Greek Orthodox church) வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக நரகத்தின் வாயிலாக காசா மாறியுள்ளது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியைச் சேர்ந்த ஜூலியடே டோமா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “முற்றுகையிடப்பட்டுள்ள காசாவாசிகளுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. நீண்ட இரண்டு வாரங்களாக காசாவாசிகளுக்கு எந்த ஒரு நிவாரண பொருள்களும் கொடுக்க முடியவில்லை. கடிகாரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ராஃபா எல்லை சாலை எப்போது சீராகும் என்று தெரிவியவில்லை” என்றார்.

தொடர்ந்து நிவாரண பொருள்கள் ஹமாஸ்கள் வசம் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது, “UNRWA கடுமையான கண்காணிப்பும் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த 13,000 ஊழியர்கள் உதவி தேவைப்படுவோருக்கு நேரடியாக சென்று பொருள்களை அளிப்பார்கள். நாங்கள் பல தசாப்தங்களாக இதனைச் செய்துவருகிறோம்” என்றார்.