ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம்: அண்ணாமலை!

வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை, மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் அண்ணாமலையின் பாதயாத்திரை நேற்று நடைபெற்றது. அப்போது மக்கள் மத்தியில், பாஜகவுக்கு ஆதரவு திரட்டியும், திமுக அரசை விமர்சித்தும் பேசியுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை பேசியதாவது:-

சூலூர் தொகுதியில் மட்டும் 1 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களுக்கு திமுக கொடுத்து நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளான, வாக்குறுதி எண் 138 – நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி, வாக்குறுதி எண் 139 – விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசு பள்ளி சீருடை கொள்முதல், வாக்குறுதி எண் 140 – அரசு நூல் கொள்முதல் நிலையம் என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணத்தை 15% முதல் 50% வரை உயர்த்தி, இந்தப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான விசைத்தறிகளை முடக்கியிருக்கிறது திமுக. தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தீயணைப்பு நிலையம், அரசுக் கலைக்கல்லூரி, சூலூரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல், சூலூரை மையப்படுத்தி தொழிற்பேட்டை, வேலை வாய்ப்பை அதிகப்படுத்திடும் வகையில் சோமனூரில் ஜவுளிச் சந்தை, ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் உள்ளன. ஆனால் திமுக அரசு இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கோவை மாவட்டத்தில் மட்டும், 53,688 பேருக்கு பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ், 3,30,588 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,14,763 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 43,451 பேருக்கு 300 ரூபாய் மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், 1,19,709 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 62,893 விவசாயிகள், வருடம் 6000 ரூபாய், முத்ரா கடனுதவி 9602 கோடி ரூபாய் ஆகிய நலத் திட்டங்கள் வழங்கியுள்ளது. பாஜக இந்த சாதனைகளைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்போம்.

திமுகவின் சாதனைகள், 52,000 கோடி டாஸ்மாக் வருமானம், கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியானது, மாநிலத்தின் கடன் சுமையை 7,20,000 கோடியாக அதிகரித்தது, மணல் கொள்ளையால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாக்கி இருப்பது, கோவில் உண்டியலை கொள்ளை அடிப்பது, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், யாருக்குக் கொடுத்தார்கள் என்பதே தெரியாமல் தேடும் திட்டத்தை நிறைவேற்றியது, திரைப்படங்களை முடக்குவது, அரசு மருத்துவமனைகளை அபாய மருத்துவமனைகளாக மாற்றி வைத்தது, போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரும் ஆசிரியர்கள், செவிலியர்கள் அனைவரையும் கைது செய்வது, முதலமைச்சரின் மகனும் மருமகனும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தது, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் அமைச்சர்களைக் காப்பாற்றுவது, சட்டமன்றத்தில் உதயநிதி புகழ் பாடுவது, 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களைச் சரி செய்யாதது. இவைதான் திமுகவின் சாதனைகள்.

ஓசூரில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பள்ளிக்கூட மேற்கூரை சிறிய மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் அங்கு இல்லை. திமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய கட்டிடத்தின் நிலை இது தான். எங்கும் ஊழல் எதிலும் ஊழல். வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை, மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.