மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணைத் தலைவரும், எம்.பியுமான அர்ஜூன் சிங், அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸில் இருந்தவர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்த அர்ஜூன் சிங், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு பாரக்பூர் தொகுதியில் சீட் கொடுக்காததால், அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார். பின்னர் பாஜகவில் இணைந்து சீட் பெற்று திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் திரிவேதியைத் தோற்கடித்தார். பாஜகவில் மாநில துணைத் தலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், சணல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,500 ஆக நிர்ணயிக்கப்பட்ட அறிவிப்பை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றதை விமர்சித்திருந்தார் பாஜக எம்.பியான அர்ஜூன் சிங். தனக்கு கட்சியில் சிலர் சிக்கல் தருவதாகவும் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில்தான் கட்சி மீதான அதிருப்தியால் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார் அர்ஜூன் சிங். அர்ஜூன் சிங் திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேசி அக்கட்சியில் இணைந்தார்.
3 நாட்களுக்கு முன்பு கூட அர்ஜூன் சிங், வதோதராவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின் லைவ் லிங்க்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்நிலையில் இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், “சில சமயம் உனக்குள் பார்.. உன்னையும் தேடு” என்று குறிப்பிட்டுள்ளார் அர்ஜூன் சிங்.
அர்ஜூன் சிங்கின் மகன் பவன் சிங் பட்பாரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். அர்ஜூன் சிங் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் இணைந்துள்ள நிலையில் தந்தையைத் தொடர்ந்து பவன் சிங்கும் பாஜகவில் இருந்து விலகுவார் எனக் கூறப்படுகிறது. இதனால், மேற்கு வங்க பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.