பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பல் பிடுங்கிய பாம்பு என்றும், பியூஸ் போன பல்பு எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பா.ஜ.க.வில் சேர்ந்தவுடனே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து பிறகு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு நாள்தோறும் அடாவடித்தனமான அதிரடி பேச்சுகளால் ஊடக வெளிச்சம் பெற்று மிகப்பெரிய தலைவராக முடியும் என்று கனவு கண்டு செயல்பட்டு வருகிறார். அடிப்படையில் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இவருக்கு மூத்த பா.ஜ.க. தலைவர்கள் யாருமே ஆதரவாக இல்லை. இவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தான். இந்த சூழலில் ஒட்டுமொத்த பா.ஜ.க. எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., – பா.ஜ.க. கூட்டணி அமைய வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் விருப்பத்திற்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க., ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு எந்த காலத்திலும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவித்து விட்டார். அதற்குப் பிறகு அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு, இனி அ.தி.மு.க.வுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டது. அதற்கு பிறகு பல் பிடுங்கிய பாம்பாக, பியூஸ் போன பல்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க அண்ணாமலையின் பரிந்துரையின் பேரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீட்டிய சதித் திட்டம் தான் கைது நடவடிக்கை. அதன் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது 8 ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அவசியமில்லாமல் மூக்கை நுழைத்து அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு 4 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டவுடனேயே நெஞ்சு வலி ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுக்கக் கூட வாய்ப்பு தராமல் புழல் சிறையில் அடைப்பதில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டியது. இதனால், கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு இதய நோயாளியான செந்தில் பாலாஜி கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிற சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். ஒரு சாதாரண வழக்கில் ஒரு குற்றவாளியை விசாரிக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகும், அவரை ஜாமினில் விடுவிக்கக் கூடாது என்று வாதாடியதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில் அரைவேக்காடு அண்ணாமலை தாம் ஒரு நீதிபதி போலக் காட்டிக் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார். இன்றைக்கு மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இச்சூழலில் இந்தியாவை ஆளுகிற பா.ஜ.க. கட்சியின் தமிழக தலைவர், தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது என்று ஒரு மாநில பா.ஜ.க. தலைவர் கூறுவது நீதிமன்ற நடைமுறையில் தலையிடுவது மிகப்பெரிய குற்றமாகும். இத்தகைய குற்றத்தை கூலிக்கு கூட்டத்தை சேர்த்து அதிரடி பேச்சுக்களின் மூலம் தாம் ஒரு தலைவராக முடியும் என்று பகல் கனவு காண்கிற அண்ணாமலை செய்திருக்கிறார். இவருக்குச் சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறதோ இல்லையோ, தமிழக மக்கள் வருகிற மக்களவை தேர்தலில் தமிழக பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட் இழந்து அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியலால் தமிழக பா.ஜ.க. மிகப்பெரிய விலையைத் தரப்போவது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.