வட கிழக்கு மாநிலங்களில் ஊழல் கலாசாரத்தை அடியோடு ஒழித்த பெருமை பா.ஜ.,வுக்கு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாசாலப் பிரதேச மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அருணாசல பிரதேசத்தில் ரூ.1,000 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமித்ஷா பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-
வட கிழக்கு மாநிலங்களில் ஊழல் கலாசாரத்தை ஒழித்து, அரசு உதவிகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்த பெருமை, பா.ஜ., அரசுக்கு உள்ளது. முந்தைய காங்கிரஸ், ஆட்சியில் அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இடைத்தரகர்கள் சுருட்டி வந்தனர். இதற்கு முடிவு கட்டியது பா.ஜ., ஆட்சி. மாநில மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு காசும் கடைசி மனிதருக்கும் சென்று சேருவதை உறுதிப்படுத்தியவர் பிரதமர் மோடி.
50 ஆண்டுகளாக நடந்த காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், வடகிழக்கு மாநிலங்கள் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி., ராகுல் இத்தாலி கண்ணாடியை கழற்றி விட்டு இந்திய கண்ணாடியை அணிந்தால், 50 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் காணாத வளர்ச்சியை தற்போது வட கிழக்கு மாநிலங்கள் பெற்றுள்ளது கண்ணுக்குத் தெரியும்.
முந்தைய அரசின் தவறான கொள்கைகளால் வட கிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கி இருந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் சமரச ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. கிளர்ச்சியாளர்கள், 9,600 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்தனர். இங்குள்ள இளைஞர்கள் துப்பாக்கி கலாசாரத்தை கைவிட்டு ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களை துவக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. எல்லை பிரச்னைகளுக்கும் சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. மூன்று முக்கிய இலக்குகளை அடிப்படையாக வைத்து வட கிழக்கு மாநிலங்களை முன்னேற்ற பாடுபட்டு வருகிறோம்.
முதலில் இந்த பிராந்தியத்தின் தொன்மையான மொழி, கலாசாரம், நடனம், இசை உள்ளிட்டவற்றை அழியாமல் காப்பதோடு, அவற்றை இந்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களாக மாற்ற வேண்டும். அடுத்து அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, இப்பிராந்திய இளைஞர்களை சர்வதேச அளவில் போட்டி போடும் அளவிற்கு முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில், வட கிழக்கு மாநிலங்களையும் முன்னணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.