ஹமாஸ் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றவர்களில் 2 அமெரிக்க பெண்கள் விடுவிப்பு!

ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களும் நலம்பெற முழு ஆதரவு வழங்கப்படும் என அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இதுவரை 200 பேரை ஹமாஸ் பணய கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறுகிறது.

இந்நிலையில், ஹமாஸ் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றவர்களில் அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த 2 பெண்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மனிதநேய காரணங்களுக்காக அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் ஜுடித் தை ரானன் மற்றும் அவருடைய 17 வயது மகள், நடாலி ரானன் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் பைடன் வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களுடனும் நான் பேசியுள்ளேன். அவர்கள் இருவரும் குணமடையவும் மற்றும் நலம்பெறவும் அமெரிக்க அரசு முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டு உள்ளார். அமெரிக்கர்களின் அனைத்து குடும்பத்தினரையும் ஜில் மற்றும் நான் என இருவரும் எங்களுடைய மனதில் மிக நெருக்கத்தில் வைத்திருக்கிறோம் என பைடன் தெரிவித்து உள்ளார்.

ஹமாஸ் பிடியில் இருந்து 2 அமெரிக்கர்களும் விடுவிக்கப்பட்ட சூழலில், பைடன் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அவர்கள் இருவரும் இஸ்ரேல் படைகளின் வசம் உள்ளனர் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

ஹமாஸ் படையினைர் தாங்களாக முன் வந்து, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகள் என இருவரை விடுவித்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் பலத்த சந்தேகத்தை தெரிவித்துள்ளது. அதாவது, “மனிதாபிமான அடிப்படையில் ஹமாஸ் செயல்படுவதாக காட்டிக்கொள்கிறது. எனவேதான் தற்போது இரண்டு பணயக்கைதிகளை விடுவித்திருக்கிறது. ஹமாஸ் அடிப்படையில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அமைப்பு இன்னும் ஏராளமான பெண்கள், குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருக்கிறது. அதேபோல மனித குலத்திற்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது” என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.