கனடாவிலுள்ள இந்தியர்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்குகிறது: பிரதமர் ட்ரூடோ!

இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இதற்குக் காரணமாகும். இதையடுத்து இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வந்தன. மேலும், கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களைக் காட்டிலும், இந்தியாவில் அதிகப்படியான கனடா தூதர்கள் இருப்பதாகத் தெரிவித்த இந்தியா, இதில் ஒரு சமநிலை தேவை என்று வலியுறுத்தியிருந்தது. தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் பல தூதர்கள் கனடா திரும்பப் பெற்றது.

இதற்கிடையே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கனடா தூதர்கள் மீதான இந்திய அரசின் நடவடிக்கை இரு நாடுகளிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடினமாக்குகிறது என்று தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகள் வாபஸ் பெற்ற நிலையில், ட்ரூடோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை நம்பமுடியாத அளவிற்கு இந்திய அரசு கடினமாக்குகிறது. அவர்கள் ராஜதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை மீறி அதைச் செய்கிறார்கள். இந்தியாவை தங்களுடைய பூர்வீகமாகக் கொண்ட லட்சக் கணக்கான கனடா மக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியைக் கருத்தில் கொண்டே நான் இதைக் கூறுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கனடாவின் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவது பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் இடையூறாக இருக்கும் என்றும் கனடாவில் படிக்கும் இந்தியர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் ட்ரூடோ கூறினார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ட்ரூடோ கூறியுள்ள இந்தக் கருத்துகள் மேலும் மோதலை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கிறது.

கனடாவில் வசிக்கும் 20 லட்சம் பேர், அதாவது அந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5% பேர், இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். மேலும், கனடாவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். அங்குள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40% இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கனடாவில் உள்ள பலர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.