அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கொட்டி வரும் கனமழையால் அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழை, வெள்ளத்தால் அந்த 22 மாவட்டங்களை சேர்ந்த 7.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நாகோன் மாவட்டம் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளது. அங்கு சுமார் 3.46 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 2.29 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 58,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் அங்கு கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தகவல் தொடர்பு முடக்கப்பட்ட நிலையில், தற்போது அவை மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவுகளாலும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மலைப்பாதையில் ரயில் சேவை ஒரு வாரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. அசாமின் அனைத்துப் பகுதிகளிலும் அணைகள், சாலைகள், பாலங்கள், வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.