கர்நாடகாவில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதேநேரத்தில், கேரளாவில் எல்டிஎஃப் உடனான கூட்டணி தொடரும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி கூறியதாவது:-
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கேரள பிரிவு, இடது ஜனநாயக முன்னணியுடன் தொடரும். அங்குள்ள எங்கள் கட்சி, அந்த கூட்டணியில் இருந்தவாறுதான் தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். கர்நாடகா விவகாரம் தனி. இங்கே மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும். இதைத்தான் எங்கள் தலைவர் தேவ கவுடா, நேற்று முன்தினம் பத்திரிகையாளர்கள் முன்பாக தெரிவித்தார்.
இது கொள்கை ரீதியில் முரணாகத் தெரியவில்லையா எனக் கேட்கிறீர்கள். இந்த நாட்டில் கொள்கை எங்கே இருக்கிறது? அகிலேஷ் யாதவ் என்ன கூறினார் என்பது தெரியுமல்லவா? பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்து பாராட்டிப் பேசியது தெரியுமல்லவா? 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிஹாரை எப்படி நடத்தியது என்பது உங்களுக்குத் தெரியாதா? கொள்கை என்பது எங்கே இருக்கிறது?. இவ்வாறு அவர் கூறினார்.