பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல் முருகன். ஒரு கொடி கம்பத்தை அகற்றினால் ஓராயிரம் கொடி கம்பங்கள் நடப்படும் என்றும் எல் முருகன் எச்சரித்துள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 51 அடி உயர கொடிக் கம்பம் நேற்று முன்தினம் இரவு நடப்பட்டது. இந்தக் கொடி கம்பத்தில் பாஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த கொடி கம்பத்தை அகற்றினர். ஜெசிபி எந்திரத்தின் மூலம் பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்டது. இதனை கண்டித்து நள்ளிரவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவினர் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சரான என எல் முருகனும் பாஜகவினர் தாக்கப்பட்டது மற்றும் கொடி கம்பம் அகற்றப்பட்டதற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், கோட்டையில் உங்கள் கொடி பறப்பதால் ஆணவமா? என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்ட கட்சி கொடி கம்பத்தை காவல்துறை மூலமாக தமிழக அரசு அகற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திமுகவின் இந்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எல் முருகன் தெரிவித்துள்ளார். மேலும்
ஒரு கொடி கம்பத்தை அகற்றினால் பல ஆயிரம் கொடி கம்பங்கள் வரும் காலங்களில் நடப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று எண்ணிக்கொள்ளுமாம்..!
அதுபோல ஒரு கொடி கம்பத்தை அகற்றிவிட்டதால் பாஜகவின் வளர்ச்சியை கனவிலும் தடுக்க முடியாது என்பதை இந்த திராவிட மாடல் அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்றும் எல் முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாஜக கொடிக்கம்பம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருப்பதால் அது அகற்றப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். சரி இருக்கட்டும். சென்னையில் ஆயிரக்கணக்கான கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் முறையான அனுமதி பெற்றுதான் வைக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே. ஆனால், சம்பந்தப்பட்ட இந்தக் கொடிக்கம்பம் வைப்பதற்காக 4 மாதங்களாக நாங்கள் அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால் இத்தனை மாதங்களாக அனுமதி தராதது ஏன்? அனைத்துக்கும் மேலாக, அதிகாலை நேரத்தில் போலீஸார் கூட்டமாக அங்கு சென்று பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படி என்ன தேவை? போலீஸாரின் நேரமும், ஆற்றலும் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.
எங்களுடைய பாஜக தொண்டர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பெண்கள் உட்பட பல பாஜக தொண்டர்களை போலீஸார் பிடித்து வைத்துள்ளனர். யார் உங்களை இதை செய்ய வைத்தார்கள்? பழிவாங்கும் அரசியல் இல்லாமல் இதை வேறு என்ன சொல்வது? இப்படியெல்லாம் செய்து பாஜகவினரை பயமுறுத்தி விடலாம் என நினைக்கிறீர்களா? அது நடக்கவே நடக்காது. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறினார்.