போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கூடுதல் கட்டண புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும், தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று மாலை முதல் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கே.கே.நகரில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில், இணை ஆணையர் முத்து தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆம்னி பேருந்துகள் சங்க நிர்வாகி ஜெயபாண்டியன் கூறியதாவது:-
அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். மேலும், தவறுதலாக சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்க வேண்டும். முறையாக சாலை வரி உள்ளிட்டவை செலுத்தாத வாகனங்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும். பயணத்தின்போது நடுவழியில், பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்களை சிறைபிடிக்கக் கூடாது. உள்ளிட்ட எங்களது 3 கோரிக்கைகளையும் அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து எங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். ஆம்னி பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நல்ல முறையில் சேவை செய்ய விரும்புகிறோம். எனவே, வழக்கம்போல், ஆம்னி பேருந்துகள் இயங்கும்.
தவறுதலாக, எங்களது ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்துள்ளதைச் சுட்டிக்காட்டினோம். சிறைபிடிக்கப்பட்டுள்ள வாகனங்களில், யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால், அதுதொடர்பான புகார் நகல்கள் இருந்தால், அந்த வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், எந்தவிதமான புகாருக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாத வாகனங்கள் மற்றும் முறையாக வரி செலுத்திய வாகனங்களை நாளை விடுவித்துவிடுவதாக கூறியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டோம். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. அதிகாரிகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். மேலும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், எங்களுடைய வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். இவ்வாறு ஜெயபாண்டியன் கூறினார்.