அண்ணாமலை தரம் தாழ்ந்து நடந்து கொள்வதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துரை வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன. அதில் மதிமுகவும் ஒன்று. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது. அதற்கு மதிமுக சார்பாக முழு ஆதரவு உண்டு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக ஆகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நீட் விளக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு எதிரானதாக இருக்கும். மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
நடிகர் விஜயும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அவர் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இந்தியா கூட்டணி, மதசார்பின்மைக்கான கூட்டணி. 5 மாநில தேர்தலுக்குப் பின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இதில், இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன.
சாதி வாரி கணக்கெடுப்பை திமுக, மதிமுக என அனைவரும் வலியுறுத்துகிறோம். பிகாரரைப் போல மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம். என்றாலும், தேசிய ஜனத்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும் போது பல நன்மைகள் உள்ளன. இதில் மத்திய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு எடுக்கும்.
அண்ணாமலை நல்ல காவல்துறை அதிகாரியாக இருந்தவர். தற்போது ஒரு சராசரி அரசியல்வாதி போல் செயல்படுகிறார். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். பாஜகவினர் கைது செய்யப்பட்டால் அதற்கு ஒரு மாதிரியும், மாற்றுக் கட்சியினர் கைதுக்கு வேறு மாதிரியும் அறிக்கை கொடுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.