மோடி இல்லை என்றால் திமுகவால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் சீமான் கூறியதாவது:-
நீட்டை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரசும் தான். ஆனால், இப்போது நாடகமாடுகிறார்கள். திமுக ஒப்புதல் இல்லாமலே நீட்டை கொண்டு வந்திருக்க முடியும். இதற்கு முதலில் உதயநிதி பதில் சொல்லட்டும். செங்கல்லைத் தூக்குவது.. முட்டையைத் தூக்குவதை எல்லாம் மக்களை அவர் ஏமாற்றவே செய்து வருகிறார். நமது நாட்டில் அனைத்து வேலை செய்வோருக்கும் தேர்வுகள் இருக்கிறது. அந்த தகுதியைப் பெற்றால் மட்டுமே அவர்களுக்கு அந்த வேலை கிடைக்கும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதாவது தேர்வு இருக்கிறதா.. எந்தவொரு தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்ற சூழல் இருந்தால் எப்படிச் சரியாக இருக்கும். இங்கே செவிலியர்கள் நியாயம் கேட்டுப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் செவி சாய்க்கக் கூட அரசுக்கு நேரமில்லை.
சம வேலைக்குச் சம ஊதியம் வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் அரசிடம் நிதி இல்லை என்கிறார். அவர்கள் வீட்டில் நிதி கொட்டி கிடப்பதால் தான் அரசுக்கு நிதி இல்லை என்கிறார்கள். அரசுக்கு 9 லட்சம் கோடி கடன் உள்ளது. எந்தத் திட்டத்திற்கு இவ்வளவு கடன் வாங்கினார்கள்.. மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உறுதி செய்துவிட்டு இவ்வளவு கடன் இருக்கிறது என்று சொன்னால் கூட ஏற்கலாம். ஆனால் நிலைமை இப்படியா இருக்கிறது. மின் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் வறுமையில் இருக்கும் மக்களுக்கும் கூட ஆயிரக் கணக்கில் மின் கட்டணம் வருகிறது. இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்.. இது குறித்து நான் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறேன். ஆனால் ஒருவரிடமும் பதில் இல்லை.
மோடி மோடி எனப் பூச்சாண்டி காட்டி திமுக ஆட்சி வந்துள்ளது. மோடி இல்லை என்றால் திமுகவால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இதனால் திமுக தான் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், நீட்டை ஒழிக்க இவர்கள் எதையும் செய்யவில்லை. போராட்டம் கூட நடத்தவில்லை. இப்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தேர்தல் நாடகம் அவ்வளவுதான். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக்கியுள்ளது நல்ல முடிவு. பாஜக என்பது அதிமுகவிற்கு ஒரு கூடுதல் சுமையாகவே இருந்தது. பாஜக மட்டுமில்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் கூட தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் இல்லை.
பாஜகவால் அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பி அண்ணாமலை, தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா. அப்படி அறிவித்தால் கொள்கை கோட்பாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு, நாங்களே ஆதரிப்போம். தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று நாங்களே ஆதரிப்போம். உண்மையில் பாஜகவுக்குத் தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை இல்லை. தமிழைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறார்கள். நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் கல்வெட்டில் கூட மூத்த மொழியான தமிழ் எழுத்துக்கள் இல்லை.. தேர்தலில் வெல்லாதவருக்குக் கூட கேபினடட் அமைச்சர் பதவியை பாஜக கொடுத்தது. ஆனால், தேர்தலில் வென்ற பொன் ராதாகிருஷண்னுக்கு இணை அமைச்சர் பதவி மட்டுமே தரப்பட்டது. இதுவே அவர்கள் தமிழர்களை எப்படிப் பார்க்கிறார்கள் எனக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.