மணிப்பூர் வன்முறைக்குக் காரணம் எல்லை தாண்டிய தீவிரவாதிகளே: மோகன் பகவத்

மணிப்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்டதன் ஆண்டு விழா மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

மணிப்பூர் வன்முறையில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அங்கு பல ஆண்டுகளாக குகிகளும் மைதேயிகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். திடீரென அங்கு எப்படி கலவம் மூண்டது? இந்த மோதல்களால் வெளிநாட்டு சக்திகளுக்கு நன்மை உண்டாகும். இதில் ஏதாவது வெளிநாட்டு சதிகள் இருக்கின்றனவா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தார். யார் இந்த கலவரத்தைத் தூண்டி விட்டது? இந்த வன்முறை தற்செயலாக நடக்கவில்லை. அது நடத்தப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்புவதற்காக பணியாற்றிய சங்பரிவாரத் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன். சில சமூக விரோத கும்பல்கள் தங்களை கலாச்சார மார்க்ஸிஸ்ட்கள் அல்லது விழிப்படைந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு மார்க்ஸை மறந்து விட்டார்கள். அவர்கள் ஊடகங்கள், கல்வி, கலைச்சாரம் மற்றும் சமூக சூழல்கள் ஆகியவைகளைத் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு குழப்பத்தையும் ஊழலையும் உண்டு பண்ணுகிறார்கள். இவர்கள் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதனால் இவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து மக்கள் நாட்டின் வளர்ச்சி, ஒற்றுமை, நேர்மை, அடையாளத்தை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ்-ன் வருடாந்திர விஜயதசமி விழாவில் பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான சங்கர்மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய சங்கர் மகாதேவன், “ஆர்எஸ்எஸ் பற்றி நான் என்ன சொல்ல முடியும். நான் வணங்க மட்டுமே முடியும். அகண்ட பாரதம் என்னும் நமது சிந்தனை, பாரம்பரியம், மற்று கலாச்சாரம் ஆகியவைகளைப் பாதுகாப்பதில் மற்ற யாரையும் விட ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு மகத்தானது. நான் ஒரு பாரதிய நாஹ்ரிக் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். நாம் அனைவரும் அவரவர் துறைகளில் நாடு குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைய பங்களிப்பு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.