பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
பா.ஜ.க.வில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் நடிகை கவுதமி. பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தவர். தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல், மோடி கொண்டு வரும் திட்டங்களை மேடைக்கு மேடை பேசி தமிழகம் முழுவதும் பரப்பியவர். இதுபோன்ற சூழலில், பா.ஜ.க.வில் இருந்து மிகுந்த வலியுடன் விலகிக் கொள்வதாக கவுதமி அறிக்கை வெளியிட்டார். மேலும், அழகப்பன் என்ற பா.ஜ.க. நிர்வாகி, தனது சொத்துகளை ஏமாற்றி விற்று பல கோடி மோசடி செய்துவிட்டதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக கட்சித்தலைவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கவுதமி குற்றம்சாட்டி இருந்தார். மோசடி தொடர்பாக அழகப்பன் மீது கவுதமி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதில் தலைமறைவாக இருக்கும் அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கவுதமி கடிதத்தில் கூறியுள்ளார்.
கட்சியில் இருந்து கவுதமியின் திடீர் விலகல் குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது:-
எனக்கு கவுதமி மீது அதீதமான அன்பு, பாசம், மரியாதை உண்டு. பா.ஜ.க.வில் கடந்த ஒருசில ஆண்டுகளாக தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி அவர். அவர் எந்தளவுக்கு கட்சிக்காக கடுமையாக உழைத்தார் என்பது எனக்கும் தெரியும். அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கடிதத்தைப் பார்க்கும்போது எனக்கு கடுமையான மனவேதனை ஏற்படுகிறது. தான் ஒரு சினிமா ஸ்டார். தனக்கு எப்போதும் முன்னுரிமை தரவேண்டும் என்று கவுதமி ஒருபோதும் யோசித்ததே இல்லை. அந்தளவுக்கு கட்சியின் அடிப்படை தொண்டர் போல பணியாற்றக்கூடியவர்.
நிச்சயமாக கட்சிக்காரர்கள், சட்டத்துக்குப் புறம்பாக யாரையும் பாதுகாக்கப் போறது இல்லை. கவுதமி இன்னமும்கூட மாநிலத் தலைவரிடமோ, என்னிடமோ அந்தப் பிரச்சினை குறித்து முழுமையாகக் கூறவில்லை. அதேநேரம், ஒரு மாநில அரசு புகார் கொடுத்து இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. கவுதமி பா.ஜ.க.வில் இருப்பதால், நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களா? ஆனால், அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு, புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் புகார் பதிவு செய்வேன் என்று நெருக்கடி கொடுத்தார்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே, இந்த விசயத்தைப் பொறுத்தவரை, மகளிரணி தலைவராக எனக்கும் ஒரு மனவேதனையை கொடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.