“இங்கே கேள்வி அதானி விவகாரம் பற்றியது இல்லை.. நாட்டின் பாதுகாப்பு குற்றம்சாட்டப்பட்ட எம்பியின் ஊழல் மற்றும் குற்றச் செயல் பற்றியது” என்று மஹுவாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக நிஷிகாந்து துபே தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே சில தினங்களுக்கு முன்பு குற்றசாட்டு வைத்தார். மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை என்றும், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்ப அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகக்கூறி, ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பதில் அளித்திருந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, “போலி பட்டாதாரி மற்றும் பிற பாஜக பிரமுகர்கள் மீதான உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சபாநாயகர் அவைகளை எல்லாம் முடித்த பின்னர் என் மீதான குற்றசாட்டுக்கு விசாரணை குழு அமைக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே, “இங்கே கேள்வி நாடாளுமன்ற கண்ணியம் பற்றியது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்ட எம்.பி.,யின் முன்னுரிமை, ஊழல் மற்றும் குற்றச்செயல் பற்றியது. தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) மின்னஞ்சல் துபாயில் திறக்கப்பட்டதா இல்லையா, கேள்வி கேட்பதற்கு பணம் பெறப்பட்டதா இல்லையா, உங்களுடைய வெளிநாட்டுப் பயணங்களுக்கு யார் செலவு செய்தது, பயணத்துக்கு மக்களவை சபாநாயகர், இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டதா என்பவைகளுக்கு பதில் சொல்லவேண்டும். இங்கே கேள்வி அதானி, பட்டங்கள் மற்றும் திருட்டு பற்றியது இல்லை. உங்களின் ஊழல் மற்றும் நாட்டை தவறாக வழிநடத்துவது பற்றியது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தக்குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்திருந்த தர்ஷன் ஹிராநந்தானி, மஹூவா மொய்த்ராவுக்கு லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், மஹுவா மொய்த்ரா அவரது நாடாளுமன்ற கணக்கையும் அதன் கடவுச் சொல்லையும் தன்னிடம் கொடுத்தார் என்றும் அதன் மூலம் தேவைப்படும்போது மஹூவா சார்பாக தான் கேள்விகளை எழுப்பியதாகவும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி தெரிவித்தார். இதுகுறித்து மக்களவை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு பிரமாண பத்திரம் அனுப்பியிருந்தார். இதன் பிரதியை சிபிஐ மற்றும் நிஷிகாந்த் துபேவுக்கும் மின்னஞ்சல் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த மஹுவா, அந்தப் பிரமாணப் பத்திரம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஹிரா நந்தானியை மிரட்டி கையெழுத்து வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொலைக்கட்சி பேட்டி ஒன்றில் பேசி இருந்த ஹிராநந்தானி, “என்னுடைய தவறான தீர்மானத்தால் நான் இந்த விவகாரத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். நான் என்ன நடந்தது என்பதை எனது பிரமாண பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் பிரமாணபத்திரத்தில் நானே கையெழுத்திட்டிருக்கிறேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை, நானாகவே கையெழுத்திட்டேன். இதற்கு, துபாய் தூதரக அதிகாரி அலுவலகத்தில் நான் நோட்டரி பெற்றதே இதற்கு சாட்சி” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மக்களவை ஒழுங்கு நடவடிக்கைக் குழு நாளை (அக்.26) விசாரணை செய்ய இருக்கிறது.