குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை என தகவல்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே குற்றபின்னனி கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் என்பவர் 2 பெட்ரோல் வெடிகுண்டுகளை ஆளுநர் மாளிகை முன்பு வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே குடியரசுத் தலைவர் 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையில் தங்கி அதன் பின்பாக 27-ம் தேதி OMR சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் குடியரசு தலைவரை ஆளுநர் மாளிகையில் தங்க அனுமதிப்பார்களா என்ற கேள்வியெழுந்தது. இதற்கு சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகம், சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய இருவரும், இந்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவத்தல் தற்போது வரை குடியரசு தலைவர் வருகையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையிலேயே தங்குவார் என தெரிவித்துள்ளனர், மேலும் பெட்ரோல் வெடிகுண்டு சம்வத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் குறித்த கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. கருக்கா வினோத் தற்போது பெட்ரோல் வெடிகுண்டு வீசியது நான்காவது சம்பவம் என கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியது முதல் சம்பவமாக கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இதே போல் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வில் பாஜகவின் நிலைபாடு தனக்கு பிடிக்கவில்லை என கூறி பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. டூவீலரில் வந்த மர்மநபர் ஒருவர் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடம் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அந்த நபர் தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. இதையடுத்து கருக்கா வினோத்தை கைது செய்த கிண்டி போலீசார் அவரிடம் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த வேளையில் சிறையில் இருந்த கருக்கா வினோத்தை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்என் ரவி அனுமதி வழங்காமல் இருந்ததாகவும், அதனால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.