மணிப்பூர் பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் தப்பிக்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ்

மணிப்பூர் பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இதில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மணிப்பூரில் அண்மையில் 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.

இந்த இனக்கலவரம் தொடங்கி 175 நாள்களாகி விட்டது. இந்த பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் வலைதளத்தில் 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

மணிப்பூரில் பாஜ எம்எல்ஏக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அவர்களையும் முதல்வரையும் இதுவரை பிரதமர் மோடி அழைத்து ஏன் பேசவில்லை? மணிப்பூரை சேர்ந்த ஒன்றிய வெளியுறவு துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அவரது மாநில பிரச்னைக்காக ஏன் பிரதமரை சந்திக்க முடியவில்லை? அனைத்து விவகாரங்கள் குறித்து பேசும் பிரதமர் மோடியால் மணிப்பூர் பிரச்னை குறித்து 4-5 நிமிஷங்களுக்கு மேல் ஏன் பேச முடியவில்லை?

மணிப்பூரின் பல்வேறு சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்ட மாநில முதல்வரை ஏன் இதுவரையில் மாற்றவில்லை? மணிப்பூர் கலவரம் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி தலையிடாமல் அந்த மாநிலத்தை அப்படியே கைவிட்டதை நாட்டு மக்களும், சமாதானம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்களும் கவனித்து கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.