போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய கடந்த பிப்ரவரி 24ந்தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. போர் தொடங்கி இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றன. ரஷ்ய போரில் எண்ணற்ற வீரர்கள் உள்பட, பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் தீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போரில், குடிமக்களை இலக்காக கொள்ளவில்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்து உள்ளது. உக்ரைனிய ராணுவத்தின் மீது நடத்தப்படும் சிறப்பு நடவடிக்கை என்றே ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் டாவோசில் உலக பொருளாதார கூட்டமைப்பில் பார்வையாளர்கள் மத்தியில் வீடியோ இணைப்பு வழியே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:-
போரின் தொடக்கத்தில் கீவ் நகருக்கு வெளியே ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதியில் நிறைய பேர் கொல்லப்பட்டு இருந்தனர். அவர்களின் உடல்களை நாங்கள் மீட்டோம். ஒருபுறம் போர் நடந்து பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் பிற அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவது என்பது ஏற்க முடியாதது. ரஷ்ய அதிபர் புதின் தவிர, ரஷ்ய கூட்டமைப்பு சார்பில் வரும் யாருடனும் எந்த கூட்டத்திலும் பேச நான் தயாராக இல்லை. அதிலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரம் பற்றி மட்டுமே நான் பேசுவேன். வேறு எந்தவித கூட்டம் நடைபெறுவதற்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை. ரஷ்ய கூட்டமைப்பின் அதிபரே அனைத்து விவகாரங்களையும் முடிவு செய்கிறார். அவர் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி நாம் பேசினால், அதில் போரை நிறுத்தும் முடிவை எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தொலைக்காட்சியில் பேசிய ஜெலன்ஸ்கி தூதரக அளவிலான பேச்சுவார்த்தை இன்றி போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது என குறிப்பிட்டார். இந்த போரானது அதிக அளவில் மனிதர்களை விலையாக கொடுத்துள்ள சூழலை உக்ரைனியர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனிய படைகள் கார்கிவ் நகரருகே வெற்றியை நோக்கி செல்கின்றன. ஆனால், தொன்பாசில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து உள்ளது. எங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், அதில் தீர்வு எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய ராணுவ வீரருக்கு உக்ரைனில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போரில், ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின்(21), உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை சுட்டுக் கொன்றார். இதேபோல், உக்ரைன் நாட்டு பொதுமக்களில் ஒருவரையும் தலையில் சுட்டுக் கொலை செய்தார். இதையடுத்து, அவர் போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நீதிபதிகள் குழு முன், ஷிஷிமரின் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மன அழுத்தத்தில் இருந்ததால் போர் விதிமுறைகளை மீறி இரண்டு பேரை கொலை செய்து விட்டதை ஒப்புக் கொண்ட ஷிஷிமரின், எந்த தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்வதாக கூறினார். போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வாடிம் ஷிஷிமரினுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.